காற்றில் பறந்த நகை கடன் தள்ளுபடி வாக்குறுதி - மத்திய இணை அமைச்சர் முருகன் - Union Minister Murugan has said that the DMK has not fulfilled its election promises.
தேர்தல் அறிக்கையில் அளித்த கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " திமுக அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் செய்ய தவறி இருக்கிறது. சில பொய்யான தகவல்களை சொல்லி மக்களிடம் வாக்குகளை வாங்கி ஓராண்டு ஆகியும் அதை செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி மயானங்கள் என்கின்ற நிலையில் இது எப்படி திராவிட மாடல் ஆட்சியாகும். சமத்துவம் என்ற சொல்லும் திமுகவிற்கு என்ன சமத்துவம் இருக்கிறது.
தேர்தல் அறிக்கையில் சொன்ன கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துள்ளது. இதெல்லாம் சாத்தியமில்லை என தெரிந்தும் பொய்யாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிறகு அதை அப்படியே மறப்பதே திமுக-வின் வாடிக்கையாக உள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அங்கு வரி உயர்த்தப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 100 சதவீதம் வரி அதிகரித்துள்ளது. ஏழை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமை என்று கூறிய அவர், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் தெளிவாக சொல்லியுள்ளார். நாட்டில் எந்த பகுதியிலும் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியும் வழங்கப்பட்டு வருகிறது.
மக்களை பற்றி கவலைப்படாத அரசு தான் திமுக அரசு. இந்த அரசு மக்கள் மீது மட்டுமன்றி ஊழியர் மீதும் கவனம் செலுத்த முடியாத அரசாக உள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே லாக்கப் மரணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திருவண்ணாமலை, சென்னை என பல பகுதிகளில் நிறைய லாக்கப் மரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல இடங்களில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
தமிழக அரசு தொடர்ந்து இந்து கலாச்சாரத்திற்கும், பண்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசு அனைத்து மதத்திற்கான நடைமுறைகளை பின்பற்றும் அரசாக இருக்க வேண்டும். ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது மிகவும் கண்டிக்கக்கூடியது. இது இந்து மக்களை மிகவும் வேதனைப் படுத்தி உள்ளது மக்கள் மிகவும் கோவத்தில் உள்ளனர், மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
மீன்வளத் துறையில் ராமேஸ்வரம் பகுதியில் முதன்முறையாக மீனவ பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்தியாவில் முதன்முறையாக கடல்பாசி பூங்கா இந்த பகுதியில் அமைய உள்ளது. தமிழக அரசிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கை கிடைத்ததும் அந்த பணி தொடங்கப்படும்.
தமிழகத்திலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச துறைமுகமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க : 'நம் நாட்டிலேயே பல்வேறு வகை உணவு இருக்கும்போது, வெளிநாட்டு உணவு எதற்கு..?' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்