தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகளில் மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதி உள்ளது. இந்த நிலையில் கடும் நிலக்கரி தட்டுப்பாட்டால் கடந்த சில வாரங்களாகத் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய அரசிடம் இருந்து நிலக்கரி சரிவரக் கிடைக்கப் பெறாததால் 5 அலகுகளில் ஓரிரு அலகுகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நிலவிவரும் நிலக்கரி தட்டுப்பாட்டால் இன்று தூத்துக்குடி அனல் நிலையத்தில் மொத்தமுள்ள ஐந்து அலகுகளில் ஒரே ஒரு அலகு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது நெல்லை தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலைகள் இருந்து கிடைக்கும் மின்சாரம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே தூத்துக்குடி அனல்மின் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறுகின்றனர். இது குறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகக் காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரிக்கிறது.
இன்று அதிகபட்சமாக 3000 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகளிலிருந்து கிடைத்துள்ளது. எனவே தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பால் மின் தட்டுப்பாடு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நிலக்கரி தட்டுப்பாடு இல்லை - மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா தகவல்