கரோனாவினால் உலகமே அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பிடும்படியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக குணமடைந்து வீடு திரும்பிவரும் நிகழ்வுகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 27 பேரில், ஐந்து நபர்கள் நெல்லை மருத்துவக் கல்லூரியிலும், 22 நபர்கள் தூத்துக்குடி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் 25 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், பசுவந்தனையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை வேலம்மாள் என்பவரும் கரோனாவிலிருந்து பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், சிகிச்சைப் பெற்று வந்த கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பும் நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் மற்றும் மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி உள்பட பலர் கலந்து கொண்டு, அவருக்கு பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
இதன் மூலம் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் கரோனாவிலிருந்து குணமாகி, வீட்டுக்குத் திரும்பி விட்டனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மீதமுள்ள ஒரு நபரும் தற்போது பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். இதனால் கரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் உருவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக எந்தவித புது நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை என்பதால், தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலப் பகுதியில் இருந்து பச்சை மண்டலப் பகுதியாக மாறுகிறது.
இந்த நிலையை எட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம், மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஒத்துழைப்பு கொடுத்த மக்கள் என அனைவருக்கும் நன்றி.
மே 3ஆம் தேதிக்குப் பிறகு எம்மாதிரியான தளர்வுகள் நடைமுறைப்படுத்தலாம் என்பதை அரசே முடிவெடுக்கும். மேலும் வெளிமாநிலம், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முறையான அனுமதிபெற்று கரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர், தங்களது ஊர்களுக்குத் திரும்பலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி வெளிமாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தகுந்த மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுவர்.
ஒருவேளை தவறுதலாக முறையான அனுமதிபெறாமல் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் யாரேனும் வந்தால், அவர்கள் பற்றிய தகவல்களை மக்களே முன்வந்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இது மக்கள் நலன் சார்ந்த பிரச்னை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் பார்க்க: ரிச்ர்வ் வங்கி அறிவிப்பால் மகிழ்வது மல்லையாவும் நீரவ் மோடியும்தான் - சிதம்பரம் காட்டம்