தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 437ஆம் ஆண்டு பெருவிழா வருகின்ற 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருவிழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா, " திருவிழா வரும் 26ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தினசரி காலை, மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள், வணிக பெருமக்கள் ஆகியோருக்கும் உலக சமாதானம் வேண்டியும் திருப்பலியில் பிரார்த்தனை செய்யப்படும்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சாதி, மத வேறுபாடின்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். இத்திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் திரளாகக் கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவை பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக நடத்த வேண்டும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதாவின் திருவுருவ பவனி மற்றும் கூட்டு திருப்பலி ஆகஸ்ட் 5ஆம் தேதி மறை மாவட்ட ஆயர் ஸ்டிபன் தலைமையில் நடைபெறும். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது"என்று கூறினார்.