தூத்துக்குடி: மில்லர்புரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. தூத்துக்குடி நகராட்சியுடன், சுற்றி உள்ள சில பஞ்சாயத்துகள் சேர்க்கப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி தொழிற்சாலைகள் மிகுந்த நகரம் ஆகும். தூத்துக்குடி நகராட்சியாக இருந்தபோது, 857 தெருக்கள், சுமார் 174.770 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்திருந்தன.
இதில் 11.798 கிலோ மீட்டர் சிமெண்ட் சாலைகள், 111.87 கிலோ மீட்டர் நீள தார் சாலைகள், 18.668 கிலோ மீட்டர் நீள கல்தளம், 32.434 கிலோ மீட்டர் நீள மண்சாலைகள் இருந்தன. இந்த சாலைகள் பெரும்பாலும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது பல சாலைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று குடிநீர் திட்டமும் மேம்படுத்தப்பட்டு 4ஆவது குடிநீர் குழாய்த் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி பணிகள்
இதனால் மாநகர மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைத்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பூங்காக்கள், விரிவுபடுத்தப்பட்ட சாலைகள், நடைமேடைகள், மழைநீர் வடிகால் குழாய், 49 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், வாகன நிறுத்தம், நடைபாதைகள், பொதுக் கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம், மாநகர் பகுதியில் எட்டு பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நிழற்குடை ஒன்று, ஒரு கோடியே 54 இலட்சம்...
இந்நிலையில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். பேருந்து நிழற்குடையில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் நிழற்குடை ஒரு கோடியே 54 இலட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் ”நிழற்குடை ஒன்றுக்கு ஒரு கோடியே 54 இலட்சமா” என விவாதப் பொருளானது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தூத்துக்குடி மாநகராட்சியில் மில்லர்புரம், 3ஆவது மைல் எப்சிஐ குடோன், அரசு பாலிடெக்னிக் அருகில், பழைய மாநகராட்சி, இன்னாஞ்சியர் புரம், சார் ஆட்சியர் அலுவலகம் தமிழ்ச்சாலை ரோடு உள்ளிட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள எட்டு நிழல் குடைகளும் செப்டெம்பர் 5ஆம் தேதி அன்று திறக்கப்பட்டதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 54 இலட்சமாகும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை