ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் பொட்டலூரணி, பேரூரணி, ஓசானுத்து, ஒட்டநத்தம் உள்பட பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், "ஓபிஎஸ் பதவி இல்லாததால்தான் தர்ம யுத்தம் செய்தார். நான் ஆசைப்பட்டிருந்தால் சசிகலாவிடம் சொல்லி முதல்வராகியிருக்கலாம். பதவி ஆசையில்லாததால்தான் பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சென்றால் வென்றிருப்போம். ஆறு மாதம் காலதாமதம் ஆகிவிடும் என்பதற்காகத்தான் தேர்தலை சந்திக்கிறோம்.
துரோகிகளின் ஆட்சி அழிக்கப்படவேண்டும். துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீட் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு வைத்ததால் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவை பதவி நீக்கம் செய்துள்ளனர். இப்போது மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டிஸ் வழங்கியுள்ளனர். இதற்கு நாங்கள் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கப்போகிறோம் என சொல்கிறார்கள்.
காலத்தின் கட்டாயத்தால்தான் நான் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் ஏற்பட்டது. வாக்குக்கு 4,000, 5,000 பணம் கொடுத்தாலும் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
ஓபிஎஸ் பசுந்தோல் போர்த்திய புலியாக பாஜகவுடன் முகவராக செயல்பட்டதால்தான் அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். அவர் தற்போது வாரணாசி பன்னீர்செல்வம் ஆகிவிட்டார்" என விமர்சனம் செய்தனர்.