தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள அம்மன்புரத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவன் பூவலிங்கம். இவர் 12 ஆம் வகுப்பில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகிறார். இவருக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் உயர் கல்வியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். இதனால், மாணவனின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் டிஆர்ஓ (DRO) அலுவலகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவனுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில், தற்போது வரை மாணவனுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதால், மாணவனின் குடும்பத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று (ஜூன் 10) திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, திருச்செந்தூர் அருகே உள்ள சுனாமி நகர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர். அவர்களுடைய குழந்தைகளுக்கு பள்ளியில் பயில சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகிறது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்துள்ளனர். அப்போது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர் ராஜா என்பவர் அவர்களை அவதூறாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சுனாமி நகரைச் சேர்ந்த பழங்குடியினர் குடும்பத்தினர் மற்றும் மாணவன் பூவலிங்கம் குடும்பத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில் கோட்டாட்சியர் சான்றிதழ்களை வழங்காமல் தாமதப்படுத்துவது ஏன்? எனப் போராட்டகாரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த திருச்செந்தூர் காவல் துணைக்காணிப்பாளர் வசந்த் ராஜ் தலைமையில் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பழங்குடியினர் குடும்பத்தினர் மற்றும் மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க:பத்திரிகை, திராவிடம் இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது - எ.வ.வேலு புகழாரம்