தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்று (ஏப்.3) நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக மரக்குடி தெரு கிளியோபாட்ரா திரையரங்கம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் வேல்ராஜுடன் கட்சி தொண்டர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் நாம் தமிழர் கட்சியினரை வழிமறித்து பரப்புரைக்கு இருசக்கர வாகனங்கள் அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. மீறிப் பயன்படுத்தினால் வாகனங்களைப் பறிமுதல் செய்வோம் என எச்சரித்ததாகத் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள், கிளியோபாட்ரா திரையரங்கம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே இதுகுறித்து தகவலறிந்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்கள், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், “தேர்தல் பரப்புரைக்காக 4 இருசக்கர வாகனங்கள், இரண்டு கார்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் எங்களைப் பரப்புரை மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், பரப்புரைக்கு அதிகமான இருசக்கர வாகனங்கள் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு கூறுகின்றனர். இது யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் எங்களைத் தடுத்து நிறுத்துவதாகத் தெரிகிறது.
இதை அனைத்தையும் வாக்காளர்களாகிய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் மக்கள் இந்தத் தேர்தலில் தங்களது வாக்குச்சீட்டுகள் மூலம் அலுவலர்களுக்கும், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் பதில் சொல்வார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும். ஸ்டெர்லைட் ஆலை குறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்புவோம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்