தூத்துக்குடி மாவட்டம் சங்கரபேரி பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையும் காதலித்துவந்தனர். இந்நிலையில், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தூத்துக்குடி சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இதையடுத்து இவர்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்பொழுது தமிழ்நாடு சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார் -ஸ்ரீஜா திருமணத்தை பதிவு செய்ய இயலாது என்றும், ஆண் திருநங்கையின் திருமணத்தை பதிவு செய்ய வழி ஏதும் இல்லாததால் உங்களுடைய திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என்றும் சார்பதிவாளர் கூறியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், அருண்குமார் ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். கலப்பு திருமணத்திற்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதிகள் பெற தகுதியானவர்கள் எனக் கூறி உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் இன்று தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு திருமண பதிவுச்சான்று வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டது.
பின்னர், அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '2018ஆம் ஆண்டு எங்களது திருமணம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமண பதிவு சான்றிதழ் வழங்குவது இதுவே முதல் முறை. ஆகவே இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்தனர்.