தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மதச்சார்பற்ற கூட்டணி என்பது மக்களை ஒன்றுபடுத்துகிற கூட்டணி. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கக்கூடிய கூட்டணி அல்ல. எனவே மக்கள் எங்களுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.
சீன அதிபர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகிற விஷயங்களை, நாம் உலக விஷயமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அதை வைத்து ஆளுங்கட்சியினர் அரசியல் செய்யக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்ப்பண்பாடு கலாசாரத்தை ஏற்றுக் கொண்டால் அது மகிழ்ச்சி. ஆனால், அதற்காக பாஜகவினர் பிறமொழிகளை நம் மீது திணிக்கக் கூடாது.
சீன பிரதமர் சந்திப்பின் மூலமாக இருநாட்டு ராஜதந்திர தொடர்புகள் அதிகரித்தால் நன்று. தேர்தலில் அதிமுக கூட்டணி என்பது ஒரு விசித்திரமான கூட்டணி. பாஜக நிலைப்பாடு என்ன? பாமகவின் நிலை என்ன? என்பதெல்லாம் நமக்குப் புரியாத ஒன்று. ஆனாலும், ஒரு விதி வசத்தால் அந்தக் கூட்டணி ஓடிக்கொண்டிருக்கிறது. கொள்கை வசத்தால் ஓடவில்லை. அவர்களுடைய கூட்டணிக் கட்சிகள் பற்றி அவர்களுக்கே ஒன்றும் தெரியாதபோது, நாம் என்ன சொல்ல முடியும்"என்றார்.
மேலும் படிக்க: 'அதிமுக அமைச்சர்களின் பொழுதுபோக்கே பணம் கொடுப்பதுதான்’ - கேஎஸ் அழகிரி