தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி அன்று நடைபெறும் கந்த சஷ்டி விழாவிற்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.
அதன்படி, இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வரும் நவம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது எனத் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கோயில் நிர்வாகம் அளித்த தகவலின் படி, 14ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 7 மணி அளவில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.
பின்னர், 5ஆம் நாள் வரை அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. தினமும் பகல் 12:45 மணிக்கு யாகசாலையில் இருந்து ஜெயந்தி நாதர் எழுந்தருளி வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேல வாத்தியங்களுடன் சண்முக விலாசம் சேர்தலும், தீபாராதனையும் நடைபெற உள்ளது.
சூரசம்ஹாரம்: மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். சூரசம்ஹார நாளான 18ஆம் தேதி மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரத்திற்காகச் சுவாமி கடற்கரையில் எழுந்தருள்வார். அங்கு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெறும். பின்னர் கிரிபிரகாரம் வந்து கோயில் சேர்தல் நடைபெறும். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் முடிவுற்ற பின்னர் பக்தர்களுக்குச் சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடைபெறும்.
19ஆம் தேதி காலை 5:30 மணிக்குத் தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பாடு மாலை 6:30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து மாலை மாற்றுதல், இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளன எனத் தெரிவித்துள்ளது. மேலும், விழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காகத் தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடற்கரையில் மணலை சமன் செய்து தடுப்புகள், தற்காலிக கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயில் ஐப்பசி மாத பிரதோஷம்..! பெரிய நந்திக்கு சிறப்பு ஆராதனை..!