தூத்துக்குடி: சிலுவைப்பட்டி பெரியசாமி நகரில் வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டுக்களாக மாற்றித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி சிலுவைப்பட்டி பெரியசாமி நகரைச் சேர்ந்த மரிய மிக்கேல் அந்தோணி (55), அவரது மகன் செங்குமார் (38) ஆகிய இருவரிடம் சிவகாசியைச்சேர்ந்த பால்பாண்டியன் என்பவர், ரூபாய் நோட்டுக்களை இரட்டிப்பாக மாற்றித்தருவதாக ஆசை வார்த்தை கூறி மரிய மிக்கேல் அந்தோணியிடம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
பணத்தை கொடுத்தபின் பால்பாண்டியனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மரிய மிக்கேல் அந்தோணி , தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் விசாரணையில் அவர் வைத்திருந்த பையில் ரூபாய் நோட்டுக்கள், அதே அளவில் கட் செய்யப்பட்ட வெள்ளைத் தாள்கள், மற்றும் மை பாட்டில்கள் இருந்ததைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பால்பாண்டியன், வெள்ளைத் தாளை ரூபாய் நோட்டுக்களாக மாற்றித் தருவதாக மோசடி செய்பவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பால்பாண்டியன் வெள்ளைத் தாளில் ரசாயன மை தடவினால், அது ஒரிஜினல் ரூபாய் நோட்டாக மாறும் என்றும் அதற்கு பாதிக்குப் பாதி பணம் தரவேண்டும் என்றும் கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பால்பாண்டியனுக்கு தமிழகம் முழுவதும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூபாய் நோட்டுக்களை இரட்டிப்பு செய்து தருகிறேன் என மோசடி செய்த சம்பவம், தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி நபர் பொதுமக்களிடம் செல்போனில் பேசி பண ஆசைகாட்டி, அதில் சிலரை தங்களது மோசடி வலையில் வீழ்த்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பால்பாண்டியன் ஆசை வலையில் சிக்கியவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று, வெள்ளைத் தாள் கட்டையும், அதன் மீது 500 ரூபாய் நோட்டையும் வைத்து அதில் பினாயில், மஞ்சள் கலந்த கலவையை ஊற்றி கட்டி வைத்துவிட்டு சில மணி நேரங்கள் கழித்து பிரிந்து பார்த்தால் அந்த வெள்ளைத் தாள் கட்டுக்கள் முழுவதும் பணமாக மாறிவிடும் என்று கூறி கைவரிசை காட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.