இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி விழா, நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கரோனா விதிமுறைகள் காரணமாக பக்தர்களின்றி இந்த விழா நடைபெறும். கரோனா ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருப்பதால், கந்த சஷ்டி விழாவுக்கு வெளியூர், வெளி மாவட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. இது தவிர ஏனைய விழா நாட்களில், நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது முகக் கவசம், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திருச்செந்தூர் வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி நகரின் தந்தை என அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பெர்னாண்டஸின் பிறந்த நாள் நவம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை அரசு விழாவாக கொண்டாட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது" என்றார்.