வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கிய இடமான வி.வி.டி. சிக்னல் நான்கு முனை சந்திப்பு அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாகும்.
இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் போக்குவரத்துப் பிரிவு முதல்நிலைக் காவலர் முத்துராஜ், அப்பகுதியில் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுவந்தார். எதிரே வரும் நபர் யார் என்றே தெரியாதவாறு கொட்டும் கன மழையையும் பொருட்படுத்தாது, சாலையில் நின்றவாறு முத்துராஜ் சாலையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் இதனை வீடியோ எடுக்க தற்போது அது வைரலாகியுள்ளது.
கொட்டும் மழையில் போக்குவரத்தை சீர் செய்த போக்குவரத்துக் காவலரை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாராட்டினர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மழையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய போக்குவரத்து காவலர் முத்துராஜை கவுரவிக்கும் பொருட்டு வி.வி.டி சிக்னலுக்கு நேரில் சென்று காவலர் முத்துராஜுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் மீதான வரி ஏய்ப்பு வழக்கு: வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்!