தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பத்திற்குப் பின் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, தற்போது ஆக்ஸிஜன் உற்பத்திகாக மட்டும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தப் பணியை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் அடங்கிய கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்தி பணிகள் தொடங்கிய நிலையில், இன்று(மே.13) ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மருத்துவப் பயன்பாட்டுக்காக 4.820 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். லாரியுடன் பாதுகாப்பு பணிக்காக 6 பேர் அடங்கிய துப்பாக்கி ஏந்திய காவலர் வாகனமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறுகையில், ’பரிட்சார்த்த முறையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயார் செய்யப்பட்ட சுமார் 5 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் முதற்கட்டமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாளொன்றுக்கு 5 முதல் 10 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து பெறமுடியும். பின்னர் இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு முழு கொள்ளளவான 35 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனையும் தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போது தயார் செய்து அனுப்பப்பட்டுள்ள ஆக்ஸிஜன் ஆய்வக பரிசோதனையில் 98% தூய்மைத் தன்மை உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டில் தயார் செய்யப்படும் ஆக்சிஜனை எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்புவது என்பதை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் முடிவு செய்யும். அதன்படி இங்கிருந்து ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படுக்கை வசதிகளுடன், ஆக்ஸிஜன் வசதியும் அதிகம் தேவைப்படுவதால் ஸ்டெர்லைட்டில் தயார் செய்யப்படும் ஆக்ஸிஜன் முழுவதுமாக தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.