தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்திவரும் நபருக்கு கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல் இருந்துவந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டது.
அதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அவர் நடத்திவந்த பழக்கடையும் பூட்டி சீல்வைக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட மில்லர்புரம், டூவிபுரம், அண்ணாநகர், பூபாலராயபுரம், ராஜபாண்டிநகர், ஹாங்காங் வணிக வளாகம் உள்பட எட்டுக்கும் மேற்பட்ட இடங்கள் கரோனா பாதிப்பு காரணமாக நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
தற்சமயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 209 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நேற்றுமுதல் இன்று காலைவரை 50 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.