தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர், வாஞ்சி, மணியாச்சி பகுதிகளில் 2வது ரயில்வே பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 32 தொழிலாளர்கள் ரயில்வே பாதை அமைக்கும் பணிக்காக இப்பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களில் சிலருக்கு காய்ச்சல், இருமல் உள்ளதாகக் கயத்தார் வட்டாச்சியர் பாஸ்கருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, வட்டாச்சியர் பாஸ்கர், மணியாச்சி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
அங்கு 32 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து வந்த 3 பேருக்கு அதிகமான காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், தொண்டை வறட்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மூன்று பேருக்கும் கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து அறிய அவர்களை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீதிமுள்ள 29 பேரும் அவர்கள் பணிபுரியும் இடத்தில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் அவர்களை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்ட வாகனம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கரோனா தொற்று: வடமாநிலத்தவர்கள் திருமண மண்டபத்தில் தங்கவைப்பு