தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற திருவிழாவான குலசேகரபட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவது குறித்து அரசு அலுவலர்கள், இந்து அறநிலையத்துறை அலுவலர்கள், கோயில் நிர்வாகத்தினர் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்.07) நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, இந்த ஆண்டு வருகிற 17ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 17ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றம், 26ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 27ஆம் தேதி நடைபெறும் கொடி இறக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வழக்கமாக கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது கரோனா (கோவிட்-19) பாதுகாப்பு விதிமுறைகள் காரணத்திற்காக, இந்த ஆண்டு கோயில் பிரகாரத்திலேயே நடைபெறுகிறது.
கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனத்துக்கான அனுமதிச்சீட்டு கோயில் நிர்வாகத்தால் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்த பக்தர்களுக்கு வழங்கப்படும். கோயில் திறந்திருக்கும் நேரமான காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்கள் சமூக இடைவெளியியைப் பின்பற்றி கரோனா கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு கடற்கரையில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. திருவிழாக்காலங்களில் கோயிலைச் சுற்றி அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கும் இந்த ஆண்டு அனுமதி கிடையாது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சிக்காக முத்தாரம்மன் கோயிலில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட 400 தசராக் குழுக்களின் சார்பாக நிர்வாகிகள் இரண்டு பேர் வந்து கோயில் அலுவலகத்தில் காப்புகளை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். பதிவு செய்யப்படாத தசரா குழுவைச் சேர்ந்தவர்கள் வருகிற 14ஆம் தேதிவரை தங்களது தசரா குழுக்களை முத்தாரம்மன் கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து நிர்வாகிகள் மூலமாக காப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஆண்டு விழாவிற்கு வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் வசதிக்காக கோயில் நிகழ்ச்சிகளை யூடியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுகாதார அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. பாதுகாப்பு திருவிழா பாதுகாப்புப் பணியில் 1500 காவலர்கள் ஈடுபடுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க:தென்திருப்பதி சீனிவாச பெருமாளை தரிசித்த பக்தர்கள்!