தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 37 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 ஆயிரம் டன் மக்காசோளம் மூட்டைகள் சுகாதரமற்ற முறையில் உள்ளதை கண்டறிந்த உணவு பாதுகாப்பு மாவட்ட அதிகாரிகள் சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். அவற்றின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பிய நிலையில், அவை தரமான உணவு என்றால் விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், ஒட்டப்பிடார ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன் தினம் (ஜூன் 19) மாலை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 15 ஆயிரம் டன் மக்காச்சோளம் மூட்டைகளில் வண்டு மற்றும் இதர பூச்சித்தொற்று இருப்பதும், குடோன் மிகவும் சுகாதாரக் குறைபாட்டுடன் இருப்பதும் கண்டறியப்பட்டு, 15 ஆயிரம் டன் மக்காச்சோளமும் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைத்தனர்.
இது குறித்து மேலும் கூடுதல் தகவலுடன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சௌத் இண்டியா கார்ப்போரேஷன் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான குடோனில் ஆஸ்பின்வால் அன்ட் கம்பெனி லிமிட் என்ற நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருப்பதும், அதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 15 ஆயிரம் டன் மக்காச்சோளம் இருப்பு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனிடையே தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு சென்று ஆய்வு செய்தபோது மக்காச்சோளம் மூட்டைகளில் வண்டு மற்றும் இதர பூச்சித்தொற்று இருப்பதும் தெரியவந்தது. மேலும், குடோன் மிகவும் சுகாதாரக் குறைபாட்டுடன் இருப்பதும் பொருள் இருப்பு உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யப்பட்டது. மேலும், பாதுகாப்பிற்காக அங்கிருந்த பொருட்களுடன் அந்நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று முதல் கட்டமாக, ஆஸ்பின்வால் அன்ட் கம்பெனி பொது மேலாளர் விசாரணைக்கு ஆஜராகி இவை 37 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் என தெரிவித்துள்ளார். மேலும், சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்நிறுவன பணியாளர்களும் பொது சுகாதாரம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் அவை தரமான உணவு என்றால் விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், 'இதுபோல் கிடங்கு வைத்துள்ள உரிமையாளர்கள் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எதிர்நோக்க நேரிடும் என்றார். நுகர்வோர்கள் ஹோட்டல், ரெஸ்டாரண்ட், கேண்டின் மற்றும் பெட்டி கடைகளில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட குறைகள் காணப்பட்டால் 9444042322 என்ற பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்பு துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவிற்கு கடத்த முயன்ற 3,900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?