நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் மளிகை பொருட்கள், பால், காய்கறிகள் விற்பனையை அதிகரித்து பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் மார்க்கெட்களில் தொலைபேசி வாயிலாக ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் அவரவர் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையிலான குழுவினர், நெல்லை டவுனில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் காய்கறி, பலசரக்கு, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் பிரிவில் காலாவதியான பேரிச்சம் பழங்களை விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிரடி ஆய்வு செய்தனர்.
அப்போது, பேரிச்சம் பழத்தில் வண்டு, பூச்சிகள் இருந்த பாக்கெட்டுகள் அனைத்தையும் பறிமுதல் செய்து உணவு மாதிரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் மாலிலும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதிலும் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க தடைவிதிக்க வேண்டும்!