தூத்துக்குடி மாவட்டம், மீன்பிடி துறைமுகத்தை தளமாகக் கொண்டு 260-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில், இன்று விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாமல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் செல்லும் விசைப்படகுகள் காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும். விசைப்படகில் பயன்படுத்தப்படும் கண்ணிமடியின் அளவு 40 மில்லி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று மீன்வளத் துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் ஜான்சன் கூறுகையில், "மீன் வளத்துறையினர் பிறப்பிக்கும் உத்தரவால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீன்பிடித் தொழில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், காலை 5 மணிக்கு புறப்பட்டுச் சென்று இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என்ற விதிமுறை எங்களுக்குப் பயனற்றதாக இருக்கும்.
தமிழ்நாட்டின் பிற கடற்கரை மாவட்டங்களில் ஆழ்கடலில் தங்கி, மீன்பிடித் தொழிலுக்கு விசைப்படகுகள் சென்று வருகின்றன. ஆனால் தூத்துக்குடியில் மட்டும் ஆழ்கடலில் தங்கி, மீன் பிடிப்புக்கு மீன்வளத்துறையினர் மறுத்து வருகின்றனர். இந்த மீன்பிடித் தொழிலை நம்பி மட்டுமே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இதனால், குறைந்தபட்சம் ஐந்து மாதத்திற்கு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்வதற்கு அனுமதி தர வேண்டும். அதன் பிறகு வேண்டுமானால் காலை 5 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்குத் திரும்பி வர வேண்டும் என்ற விதிமுறையை ஏற்று தொழில் செய்ய முடியும். இதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தொடரும் மது கடத்தல்: துரத்தும் காவல் துறை!