தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் அமிர்தராஜ் (33), சங்கு குளிக்கும் தொழிலாளியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த சக மீனவ தொழிலாளர்கள் எட்டு பேருடன், மாரியப்பன் என்பவருக்குச் சொந்தமான படகில் கடலுக்குச் சங்கு குளிக்கச் சென்றுள்ளார்.
கடற்கரையிலிருந்து சுமார் எட்டு கடல் மைல் தொலைவில் சங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, அமிர்தராஜுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த மீனவ தொழிலாளர்
இதையடுத்து, சக மீனவ தொழிலாளர்கள் அவருக்கு படகில் வைத்து முதலுதவி சிகிச்சையளித்து கரைக்குக் கொண்டுவந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அமிர்தராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தூத்துக்குடி மரைன் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த அமிர்தராஜுக்கு ஜெனிட்டா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இது குறித்து, தகவலறிந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், உயிரிழந்த மீனவரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரின் மனைவி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் சார்பில் அந்தக் குடும்பத்தாருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மேலும், 'இந்தக் குடும்பத்துக்குத் தேவையான அனைத்துவிதமான உதவிகளும் செய்யப்படும்' என அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்தார்.