தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு பனங்கிழங்கு விவசாயம் நடைபெற்றுப் வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இதனை அறுவடை செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாள் தைத்திருநாளில் இடம் பெரும் பொருள்களில் பனங்கிழங்கும் ஒன்று. பனை மரத்தில் கொத்து கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டாமல் விட்டுவிட்டால் நன்றாக பழுத்து பனம்பழமாகிவிடும்.
பனைங்கிழங்கு சாகுபடி
மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். தாங்கள் சாகுபடி செய்யும் இடத்தில் பத்து அடி நீளம், பத்து அடி அகலத்துக்கு பாத்தி கட்டி அதனுள் ¼ அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதற்குள் பனையில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வந்த பனம்பழ விதைகளை நெருக்கமாக அடுக்கி வைத்து, மண்ணில் புதைத்து வைத்து, பின்னர் அவ்வப்போது தண்ணீர் தெளித்து வருகின்றனர்.
அறுவடை
மழை காலத்தில் பூமிக்குள் புகும் நிலத்தடி நீரை உறிஞ்சி தானாகவே கிழங்கு விளையும்.
புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பனம்பழத்தை விதைத்தால் மார்கழி, தை மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்கின்றனர் பனை விவசாயிகள்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை தவறியதால் பனைத்தொழில் சிறப்பாக இல்லமால் இருந்தது. இதனால் பனங்கிழங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
ஆனால் இந்தாண்டு பருவமழை தொடக்கத்தில் பெய்த காரணத்தினால் பனைத்தொழில் சிறப்பாக உள்ளது. இதனால் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்
விற்பனை
பனங்கிழங்கை பொருத்தமட்டில் ஒரு கிழங்கு மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது.
25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100க்கும், 50 கிழங்கு கொண்ட கட்டு ரூ200க்கும், 100 கிழங்கு கொண்ட கட்டு ரூ 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு நல்ல விலை கிடைத்துள்ளதால் தங்களுக்கு இந்த பொங்கல் மகிழ்வான பொங்கலாக இருக்கும் என்று பனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'புதிய கல்விக்கொள்கை வந்தால் கல்வி மத்திய பட்டியலுக்கு சென்றுவிடும்'