தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த, பாலமுருகன், காளிச்சாமி ஆகிய இருவருக்கும் இடையே, மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலமுருகன், காளிச்சாமியை அரிவாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட காளிச்சாமியின் தந்தை கருப்பசாமியும், சகோதரர் மகாராஜனும், பாலமுருகன் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் பாலமுருகன் அரிவாளால் கருப்பசாமியையும், மகாராஜனையும் வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பசுவந்தனை காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களையும் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது காயமடைந்த காளிச்சாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பசுவந்தனை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளி பாலமுருகனைத் தேடினர்.
அப்போது காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தேடிச்சென்ற காவல் துறையினர் பாலமுருகனையும் அவரது தந்தை காளிப்பாண்டியையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் இருவரும் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சாத்தூரில் தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கைது!