தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது. இந்த சேவையை தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தினசரி சென்னைக்கு 12 முறை விமான சேவை இயக்கப்படுகிறது.
இந்த சேவை தொழில்நகரமான தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதே போன்று இங்கிருந்து பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான சேவை இயக்க வேண்டும் என பயணிகள் விருப்பம் தெரிவித்ததையடுத்து இன்று பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் தினசரி காலை 5.25 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டு 6.50 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். பின்னர் தூத்துக்குடியிலிருந்து 7.30 மணிக்கு புறப்படும் விமானம் 9 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் என். சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் முடிவடைந்த பின்னர் இரவு நேர விமான சேவை தொடங்கப்படும்.
இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்காக தமிழ்நாடு அரசிடமிருந்து நிலம் பெறப்பட்டுள்ளன. விரிவாக்கத்திற்கு விமான நிலைய ஆணைய தலைவரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி விரைவில் கிடைக்கும். அதன்பின், விரிவாக்க பணி தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
தூத்துக்குடி - பெங்களூர் விமான சேவை இயக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று பயணிகள் தெரிவித்தனர். இந்த தொடக்க நிகழச்சியில், விமான நிலைய மேலாளர் ஜெயராமன், விமான நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.