தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் மக்களவை உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவருமான கனிமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவது, இரவு நேர விமான சேவை, பிற முக்கிய பகுதிகளுக்கு விமான சேவையை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இந்த கூட்டத்திற்கு பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”விமானநிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து தரப்பு மக்களும் விமான சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் விமான நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளுக்குச் செல்லும் விமானத்திலும் பிராந்திய மொழிகளில் அறிவிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கூட்டத்திற்கு பின்னர் விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து மேலும் பல பகுதிகளுக்கும் விமான சேவை இயக்குவதற்காக விமான ஓடு பாதையை 3 ஆயிரத்து 115 மீட்டர் (3,115) அளவிற்கு நீளப்படுத்தவும், புதிய விமான முனையம் அமைப்பதற்காகவும் 380 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
பணிகள் முடிவடைந்த பின் இங்கிருந்து கொச்சி, மும்பை, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட மாரடைப்பு - பெண் பரிதாப உயிரிழப்பு!