கரோனா ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையும் அதை தாண்டி கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக பரவலாகப் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராய ஊறல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே காவல் துறை ஆய்வாளர் முத்து தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அவர் வந்த இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் 5 லிட்டர் கள்ளச் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்த சீவலப்பேரியைச் சேர்ந்த நல்லகண்ணு பாண்டியனை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதேபோன்று வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்தனூர் மலையடிவாரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் இன்று சோதனை செய்தனர்.
அப்போது சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் 1,750 லிட்டர் சாராய ஊறல்களை காவல் துறையினர் கைப்பற்றி அழித்தனர். மேலும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான காவல் துறையினர் மோர்தணா அணை மலைப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கும் கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும், 800 லிட்டருக்கும் அதிகமான சாராய ஊறல்களும் கண்டுபிடித்து அழிக்கப்பட்டன.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் காய்ச்சிய 16 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!