விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை விவகாரம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார். அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரம் சூடு தணிவதற்குள் அடுத்த சர்ச்சையில் சீமான் சிக்கியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்தி வருகிறது. இதில் அக்டோபர் 16ஆம் தேதி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகி, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து விருந்தினர் மாளிகை முன்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அமைச்சர்களை ஒப்பிட்டு விமர்ச்சித்திருந்தார்.
இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுயம்பு (58) என்பவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில், சீமான் மீது 153(ஏ), 505(1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவரும் சீமானை கைது செய்ய வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.