திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக திருநாவுக்கரசர் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், வறுமை அதிகரித்துள்ளது. பொருளாதாரம் நலிந்துபோய் உள்ளது. இப்படிப்பட்ட மத்திய அரசுக்கு ஒத்துப் போகக்கூடிய அரசாக பினாமியாக இங்குள்ள அரசு செயல்பட்டுவருகிறது" என்று விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசுகையில், கே.டி. ராஜேந்திரபாலாஜி அமைச்சர் பொறுப்பிலிருந்து கொண்டு தான்தோன்றித்தனமாக பேசுவதும் கீழ்த்தரமாக தலைவர்கள், மற்ற சமுதாயம், ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களை விமர்சிப்பதும் மாபெரும் தவறாகும் எனக் கண்டித்தார். இதை காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
மேலும், தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதென்பது ஜனநாயகத்திற்கு சீரழிவு என வேதனை தெரிவித்த அவர், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது ஜனநாயகம் கேலிக் கூத்தாவதாகவும் குறிப்பிட்டார். தேர்தலில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவந்தால்தான் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.