சென்னை: சேப்பாக்கத்தில் ‘மே பதினேழு’ இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஸ்டெர்லைட் பிரச்சினை உலகளாவிய பிரச்சினை. சமரசம் இன்றி வெளி கொண்டு வந்தவர்கள் ஊடகங்கள் தமிழ்நாடு வரலாற்றில் மோசமான கரும்புள்ளி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு. இதற்கு முக்கிய காரணம், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நேரடி தலையீடு.
ஆனால், அது குறித்த அறிக்கையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குத் தொடர்பில்லாதது போல் காட்டுகிறது. ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே ஸ்டெர்லைட் நிறுவனம் 144 தடை உத்தரவு போட வேண்டும் என நீதிமன்றம் சென்றது. இதனை வலிமையான ஒரு நிறுவனம் எப்படி இந்த நிகழ்வில் பங்கில்லாமல் இருக்கும்?. காவல் துறை அதிகாரிகளும் ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு கொடுத்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இல்லை. அந்த இடம் அவர்களின் அதிகாரத்திற்கு உள்ளும் இல்லை. துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்ற முன்முடிவு இருந்ததை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போராட்டத்தைக் கலைப்பதற்குத் தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனம், வருண், வஜ்ரா வாகனம் உள்ளிட்ட வேறு பல வழிகள் மூலம் கலைத்திருக்க முடியும் ஆனால் அதனைச் செய்யவில்லை.
ஒரு மாவட்ட ஆட்சியர் இந்த பெரிய போராட்டத்தை கவனிக்காமல் வெளியே சென்றுவிட்டார். ஒருமுறை மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இன்னொரு பேச்சுவார்த்தை நடந்திருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை. அவர் போராட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்த தீயணைப்பு வாகனத்தை இறுதி நிமிடத்தில் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன், பின்னர் தான் வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. யார் தீயணைப்பு வாகனத்தை அனுப்பியது என்ற விவரம் இல்லை. எதிரி நாட்டு ராணுவத்தைச் சுடுவது போலக் காவல் துறை சுட்டுள்ளது. திறமை இன்மையினால், ஒருங்கிணைப்பு இல்லை என்பதினால் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் காவல் துறைக்கு அடையாளம் தெரியவில்லை எனக் கூறுவது ஏற்புடையதாக அல்ல.
போராட்டம் நடைபெறுவதை நாடுமுழுவதும் அறிந்த போதும். இந்த போராட்டம் குறித்தான எந்த கொள்கை முடிவையும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுக்கவில்லை. விரிவாக்கத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாதபோது மாசுகட்டுப்பட்டு வாரியத்தின் அனுமதி மீறி செயல்படுவதை. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஸ்டெர்லைட் நிறுவனம் குற்றம் செய்துள்ளது கண்டித்து ஆலை மூடப்படும் என அப்போதைய தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தால் இந்த போராட்டம் நடைபெற்று இருக்காது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்பட்டது ஒரே கட்சி பாஜக மட்டும் தான். மோடியின் இங்கிலாந்து பயணத்திற்கு வேதாந்த நிறுவனம் முழு விளம்பரம் செய்தது. போராட்டம் நடைபெற்றபோது வெளிநாட்டில் மோடியை வேதாந்த நிறுவனம் சந்தித்துள்ளது. பாஜக ஆதரவாக அதிமுக இருந்ததால், ஸ்டெர்லைட் போராட்டத்தில் முடிவு எடுக்கவில்லை. திட்டமிட்டு பச்சை படுகொலை செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து காவல் துறையினர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது. சென்னையில் 5 பேருக்கு மேல் ஒன்று கூடினால் சட்டத்திற்கு எதிரானது என்ற சட்டம் 30 ஆண்டுகளாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீது கொலைக் குற்றம் வழக்குப் பதிய வேண்டும்.
இந்த போராட்டத்தில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் மற்றும் கால் இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம். இந்த கலவரத்தில் வேதாந்தா, எடப்பாடி பழனிசாமி, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காவலர் வீர வணக்க நாள்; 21 குண்டுகள் முழங்க அஞ்சலி...