தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரம், பூவரசர், மடத்துவிளை போன்ற பகுதிகளில் அடிக்கடி தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில்,அக்டோபர் 19 நள்ளிரவு வடக்கு சுப்பிரமணியபுரத்தைச்சேர்ந்த வீமன் என்பவர், வீட்டில் ஒருவர் சுவர் ஏறி குதித்து வீட்டினுள் செல்ல முயற்சித்துள்ளார். அப்பொழுது அங்கு படுத்து இருந்த முதியவர் ஒருவர் கூச்சலிடவே திருடன் ஓடினார்.
அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற திருடனை மடக்கிப்பிடித்து அங்கிருந்த தூண் ஒன்றில் கட்டி வைத்தனர். இதனையடுத்து போலீஸுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, காலை வந்த போலீசார் திருடனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுவர் ஏறி குதித்தவர் ஆறுமுகநேரி பாரதி நகரைச்சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.