தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு தீதம்பட்டி
கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன்கள் குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தனர்.
பாலசுப்ரமணியன் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு சென்று அங்கு தொழில் செய்து வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு வியாபாரம் செய்து வருகின்றனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
மூத்த மகன் நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அவரது ஆசை. அதே போன்று நடராஜன் மகன் மோகித்க்கும் ஹெலிகாப்டரில் செல்ல ஆசை. இந்நிலையில் சொந்த ஊரில் நடக்கும் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்தார். இதற்காக பெங்களூரில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்டார்.
அதன்படி நடராஜன், அவரது மனைவி சுந்தரவள்ளி, அவரது மகன் மோகித், சகோதரர் ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்தனர்.
ஊருக்கு சென்றதும் அவரது நண்பர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். ஹெலிகாப்டரை ஆச்சரியத்துடன் பார்த்த கிராமத்தினர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர் நடராஜன் தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஊர் திரும்பினார்.