தூத்துக்குடி: புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி எனும் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் விவசாயத்தை நம்பியே தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். வருங்காலங்களில் வீடு கட்டியும், விவசாய தொழிலை மேம்படுத்தவும் சிரமப்பட்டு ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கியுள்ளனர். இவர்களது சுமார் 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன் தாஸ் என்பவர், தனி நபர் ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் நேற்றைய தினம் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், தொடர்ந்து விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கே பத்திரப்பதிவு செய்துகொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து சார்பதிவாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில், முறைகேடு குறித்து மாவட்ட பதிவாளர் பால்பாண்டி விசாரணை செய்து தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் பத்திரப்பதிவுத் துறை டிஐஜி கவிதா ராணி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மக்கள் அளித்த புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து பத்திரப் பதிவாளர் மோகன்தாஸ் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர் நடேச பெருமாள் கூறுகையில், “தெற்கு, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் 600 வீடுகள் என 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஆவணம் அனைத்தும் ஊர் மக்களிடத்தில் உள்ளது. ஆனால், சார்பதிவாளர் போலியாக பத்திரப்பதிவு செய்து எங்கள் நிலத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். எங்களது நிலம் வரவில்லை என்றால் அனைத்து மக்களும் ஒன்றும் சேர்ந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என காட்டமாக தெரிவித்தார்.
பின்னர், வெள்ளையம்மாள் கூறுகையில், “2ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை எந்த ஊர்க்காரர்களோ கள்ளப்பத்திரம் செய்துகொண்டார்கள். தயவு செய்து எங்கள் சொத்தை மீட்டுத் தர வேண்டும்” என கையை கும்பிட்டு மன வேதனையில் கூறினார்.
‘சிட்டிசன்’ படத்தில் இல்லாமல் ஆக்கப்பட்ட ‘அத்திப்பட்டி’ கிராமத்தைப் போல, இங்கு ஊரையே காணாமல் போக வைக்க முயன்ற அரசு அலுவலர், கோயம்புத்தூரைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாடிக்கையாளர் போல் நடிப்பைப்போட்டு செல்போன் திருடிய நபர் - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை