தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணைய அலுவலர் மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார். அதன்படி, ஏற்கனவே 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம், ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. 24ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 18ஆம் தேதி தொடங்கி இன்று வரை 5 நாடகள் நடைபெற்றது.
இதில் அரசு மருத்துவர்கள், நடிகர் ரஜினிகாந்த் என மொத்தம் 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் மொத்தம் 31 பேர் விசாரணைக்காக ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணைக்காக ஒருநபர் ஆணையத்தின் மூலமாக இதுவரை 918 நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 616 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 850 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
அடுத்தக்கட்டமாக பிப்ரவரி மாதம் 2ஆவது வாரத்தில் ஒருநபர் ஆணையத்தின் 25ஆவது கட்ட விசாரணை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு விரைவில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம்: 'அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்' - திருமாவளவன்