தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர்கள் பங்கேற்ற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, "உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை புதிய வாக்காளர் பட்டியலை கையாளப் போவதில்லை, ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய கையேட்டில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அதை உடனடியாக ஆட்சியர்கள் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும், வார்டு பகுதிகளில் ஒரு லட்சத்து ஆறாயிரத்து 450-க்கும் மேற்பட்டவர்களைத் தேர்வு செய்ய இருப்பதாலும் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர்களை தேர்வு செய்யவிருப்பதாலும் இவர்கள் அனைவரையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திறம்பட கையாள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.