தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். ஆதிச்சநல்லூர் ஓர் இரும்புக்கால மற்றும் வரலாற்றுத் துவக்க காலத் (பெருங்கற்காலம்) தொல்லியல் இடமாகும். இரும்புக்கால மக்கள் இறந்தவர்களைத் தாழிகளில் வைத்துப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தில் இறந்தவர்களைப் புதைத்த தாழிகள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன.
இது தமிழகத்தில் உள்ள பெருங்கற்கால இடங்களில் மிகப்பெரிய இடமாக கருதப்படுகிறது. இங்கு நடந்த அகழாய்வுகளில் பல அரிய இரும்புக்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஈமக்காடாகப் பயன்படுத்தப்பட்ட இங்கு, மூன்று அடுக்குகளில் தாழிகள் மண்ணில் புதைக்கப்பட்டுக் காணப்படுகின்றது.
ஆனால் இந்த இடத்துடன் தொடர்புடைய வாழ்விடம் எங்கு இருந்தது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு பல்லாயிரக்கணக்கான தாழிகள் காணப்படுகின்றன. இவை சிவப்பு நிறத்திலும், சில தாழிகள் கருப்பு - சிவப்பு நிறத்திலும் உள்ளன. மனித எலும்புக்கூடுகள் பல இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லா தாழிகளிலும் மனித எலும்புகள் அதிக அளவில் காணப்படவில்லை.
எனவே இறந்தவர்களின் உடல் சில சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு எல்லா எலும்புகளுமோ அல்லது சில எலும்புகள் மட்டுமோ எடுக்கப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்களும் கிடைத்துள்ளன. இங்கு கருப்பு - சிவப்பு வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒரு பானையின் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் காணப்படுகிறது.
மேலும் இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக ஆதிச்சநல்லூர் ஒரு சிறப்பு வாய்ந்த இடம் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் உலகத் தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த 5 இடங்களில் தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூரரில் தான், முதலாவதாக அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளது. இது மிகப் பெரிய வரலாற்று பதிவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நாளை (ஆகஸ்ட் 5) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லுருக்கு நேரில் வருகை தந்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து அகழ்வாராய்ச்சி தளத்தைப் பார்வையிட உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே கண்ணாடித்தளம் மேல் நின்று கொண்டு கீழே பார்வையிடும் "உள்ளது உள்ளபடியே'' என்ற அடிப்படையில் இங்கு பார்வை கூடம் அமைக்கப்பட இருக்கிறது.
மேலும் இதுகுறித்தான தகவலை, அருங்காட்சியகம் அமைக்க பெரும் பாடுபாடுபட்டவரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு ஈடிவி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலக நாகரிகத்தின் தொட்டில் என்று சொல்லக்கூடியது ஆதிச்சநல்லூர். பெரும்பாலும், தமிழக முதல்வர் உட்பட பலர் இந்தியாவின் நாகரீகத்தை எழுத வேண்டும் என்றால் அது தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து தான் எழுத வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
தாமிரபரணி ஆறு என்பது பொருநை நதி நாகரிகம். அதனால் தான் மாநில அரசு ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதியில் கிடைக்கின்ற பொருட்களை எல்லாம் காட்சிப்படுத்துவதற்கு நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மலையில் அருங்காட்சியகம் அமைத்து, அங்கு அடிக்கல் நாட்டி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.
பெரும்பாலும், ஆதிச்சநல்லூர் என்பது மிகவும் பழமையான ஒரு நாகரிகம். பொருநை ஆற்றங்கரையில் உள்ள நாகரீகம். இந்தியாவில் முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் தான் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தி அந்த அகழாய்வு பொருட்களை ஜெர்மன் நாட்டில் இருக்கக்கூடிய பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்தார். அதன்பின் அவர் ஏதும் எழுதவில்லை.
பின் 1902ல் அலெக்ஸாண்டர் ரீ என்பவர் அகழாய்வுகள் செய்து பல தொல்பொருட்களை எடுத்து சென்னையில் இருக்கின்ற அருங்காட்சியத்தில் வைத்தார். மேலும் அவர் முதன் முதலாக புகைப்படங்கள், அதாவது இரும்பு பொருட்கள், வெண்கலப் பொருட்கள், என்னென்ன மண்பாண்டங்கள் இருக்கின்றது என்று பட்டியலிட்டு, புகைப்பட கண்காட்சியாக வைத்தார்.
அதன் பின், 1920ல் வங்கதேச அறிஞர் பானர்ஜி சிந்து சமவெளிகளை ஆய்வு செய்தார். அப்படி ஆய்வு செய்யும் போது இந்த நாகரீகத்துக்கு முந்தைய நாகரிகம் தாமிரபரணி நாகரிகம், தமிழர்களுடைய நாகரிகம் என்று சொன்னார். அந்த ஆதிச்சநல்லூர் நாகரீகம் மிக முக்கியமான நாகரிகம். சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது என்று ஆங்கில நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. அதனை உலகமே உற்றுப் பார்த்தது. ஆனாலும் அது வெளியே தெரியவில்லை.
அதன் பின், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே பணிகளுக்காக குழிகள் வெட்டப்படும்போது உள்ளே இருந்து தங்கப்பொருட்கள் கிடைத்தது. அப்போது அக்கம்பக்கத்தினர் அங்கு குழிகளை வெட்டி ஏதும் கிடைக்கின்றனவா என்று பார்த்துள்ளனர். அதன் பின் தான் இந்த இடத்தை இந்திய தொல்லியல் துறை 117 ஏக்கர் கையகப்படுத்தி, அந்த இடத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாத்தனர். பின்னர், இங்கிருந்து பொருட்களை எடுத்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை என்று கூறப்பட்டபின் தான், அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஆனது.
2004ல் டாக்டர் சத்தியமூர்த்தி என்பவர் அகழாய்வு ஆராய்ச்சி செய்தார். ஆனால் அதன் அறிக்கை வரவில்லை. 2017ல் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க வேண்டும். கிடைத்த பொருளை காட்சிப்படுத்த வேண்டும். மீண்டும் அகழாய்வு பணிகள் நடத்த வேண்டும். 2004ல் அகழாய்வு செய்த அறிக்கை வேண்டும் என்றோம். மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படியே அது நிறைவேறியது.
குறிப்பாக, 2020ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் இந்தியாவில் ஐந்து இடத்தில் அமைக்க வேண்டும் என்றார். அதில் ஒரு இடம் தான் ஆதிச்சநல்லூர். அந்த இடத்தில் தற்போது உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக "உள்ளது உள்ளபடியே" பொருட்களை எடுத்து அந்த பொருட்களை அப்படியே பார்த்து ரசிக்கும் ஒரு அருங்காட்சியகத்தை அமைகின்றனர்.
ஐரோப்பியா, ஆசியா போன்ற நாட்டில் உள்ளது போன்று, இந்தியாவில் முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் அமைய இருக்கின்றது” என்றார். மேலும், ஒரு எழுத்தாளரை பொறுத்தவரை அவரது கனவானது வாழ்க்கையில் நிறைவேறி இருக்கிறது என்றால் உண்மையிலேயே ஒரு சந்தோஷமான விஷயம் தான் என்று பூரிப்படைந்த அவர், உலக நாகரிக தொட்டில் என்று சொல்லக்கூடிய தமிழக நாகரிகம் உலகம் முழுவதும் சென்றடைய ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: பி.இ படிக்க நினைக்கும் மாணவர்களின் கனிவான கவனத்திற்கு... அண்ணா பல்கலை. VC-யின் நேர்காணல்!