தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் இவர், குடும்பத்தினருடன் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, ஜனவரி 3ஆம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்ட அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 94 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான காவல்துறையினர் காரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
விசாரணையில் அந்த கார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கார் என்பதும், இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள பட்டாலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முகம்மதுயூசுப்(70), அவரது மகன்களான முகைதீன் (31), சாதிக் பாட்ஷா(29), ஷாஜகான்(23), பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாரூக்கின் மனைவி ரஹமத்,55 ஆகியோர் மருத்துவர் சொக்கலிங்கம் வீட்டில் கதவுகளை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது.
விசாரணைக்கு பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மருத்துவர் சொக்கலிங்கம் வீட்டில் திருடப்பட்ட நகையை திருநெல்வேலி டவுண் ஆசாத் நகரைச் சேர்ந்த பாபு மகன் முகம்மது உசேனிடம்(40) விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து 94 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு: ஆசாமிக்கு போலீஸ் வலை வீச்சு!