தூத்துக்குடி: தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல், தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளும், கொற்கையில் முதலாவது கட்ட அகழாய்வு பணியும் தொடங்கின. கடந்த 4 மாதமாக இந்த ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறன.
சிவகளையில் நடைபெறும் பணிகள், அகழாய்வு பணிகள் இயக்குநர், பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக, 15க்கும் அதிகமான குழிகள் அமைக்கப்பட்டு, அவைகளில் இருந்து 40க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த முதுமக்கள் தாழிகளில், 5 தாழிகள் மூடியுடன் உள்ளன. 10 தாழிகள் அளவில் பெரியதாக பிரம்மாண்டமாக உள்ளன. ஒவ்வொரு தாழியும் 2 முதல் 4 அடி வரையில் உயரமாக காணப்படுகின்றன. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவைகளுடன், பானைகள், பானையோடுகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகளை அகழாய்வு பணியில், தாமிரபரணிக் நதிக்கரை நாகரீகத்தை கண்டறிவதற்காக முதல் முறையாக வாழ்விடப் பகுதிகளையும் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கீழடி 7ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் புகைப்படத் தொகுப்பு