தூத்துக்குடி: வரலாறு காணாத வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளப்பெருக்கால் பல பகுதிகள் சேதமடைந்தன. குறிப்பாக, சாலைகள் பாலங்கள் சேதமடைந்தன. மேலும், குடியிருப்புகளுக்கு உள்ளேயும், குடியிருப்புகளைச் சுற்றியும் மழைநீர் 6 நாட்களாகியும் தேங்கிய நிலையிலேயே உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர், தங்களது அன்றாட பணிகளுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த அந்தோணியார்புரம், மழைநீர் செல்லும் உப்பாற்று ஓடை மற்றும் தமிழ்ச்சாலை ரோடு, போல்பேட்டை, செல்வநாயகபுரம் சந்திப்பு, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இன்று (டிச.23) தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் முழுவதும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. தூத்துக்குடி மாநகரம் தாழ்வான பகுதி என்பதால், இங்கு தேங்கியுள்ள வெள்ள நீர் அனைத்துமே பக்கிள் ஓடை வழியாகத்தான் கடலில் சென்று கலக்க வேண்டும்.
எனவே, தேங்கியுள்ள மழை நீர் மின் மோட்டார் மூலமாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தேவையான இடங்களில் கூடுதலாக மின் மோட்டார்கள் வரவைத்து, தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். தண்ணீர் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டு பகுதியில், தேவைக்கேற்ப கால்வாய்களை உடைத்து விட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதிக அளவில் மழை பெய்ததால்தான் இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதிக மழை பெய்யும்போது அந்த நீர் கடலில் சென்றுதான் கலக்க வேண்டும். 40 மணி நேரத்தில் சராசரி 50 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 8,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் இரண்டு மாவட்டத்திற்குள் (தூத்துக்குடி, நெல்லை) மொத்தம் 150 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. இது மேட்டூர் அணையை விட 50 சதவீதம் கூடுதலாகும்.
மணிமுத்தாறு அணையை விட 10 மடங்கு கூடுதலாகும். இந்த தண்ணீர் வடிவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 10 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்தால், எந்தவித பிரச்னையும் ஏற்பாடாதவாறு 200 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது தேங்கி உள்ள வெள்ள நீரானது, இன்னும் ஒரு சில நாட்களில் வடிந்து விடும். விவசாய சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவி, ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கும் பணி விரைவில் தொடங்கும்” என்றார். இந்த ஆய்வின்போது, வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: வெள்ளம் எப்போ வடியுமோ..? அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவில்லை என தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலைமறியல்