தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கிறது. இதில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அகல்யாவை ஆதரித்து நேற்று இரவு தருவைகுளத்தில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது சீமான் பேசுகையில், "நாட்டில் மக்கள் ஸ்டெர்லைட், மீத்தேன், ஹட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை என எல்லா இடங்களிலும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் பேசுவதை தட்டிக்கேட்க நான் வந்து விட்டேன். எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு ஸ்டாலின் முதலில் வளர்ச்சி திட்டம் என்றார். பிறகு மக்கள் எதிர்த்ததும் பின்வாங்கி விட்டார். பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானவுடன் நான் வரவேற்கிறேன் என்றார். மக்கள் கொந்தளித்ததும் பின்வாங்கி மாற்றி பேசினார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறந்த நிர்வாகம் செய்வோம். ஊழல் லஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. காவலர்களுக்கு உயர்ந்த சம்பளம், 8 மணி நேரம் ஆண் காவலர்களுக்கு, 6 மணி நேரம் பெண் காவலர்களுக்கு என சுழற்சி முறையில் பணி. இதை நான் சொல்லும்போது அனைவரும் சிரித்தனர். ஆனால், இப்போது கர்நாடகாவில் செயல்படுத்திவிட்டனர். ஓட்டப்பிடாரத்தில் அதிமுக ரூ.5000, திமுக ரூ.3000, அமமுக ரூ.2000 கொடுக்கிறது என்கின்றனர். ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 கூட கொடுக்கின்றனர். நமக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒரு ஓட்டு இருக்க கூடாதா? என்று தோன்றுகிறது", என்றார்.