தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தருவைகுளம் கிராமத்தில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சி அளித்துள்ளது. மேலும், கடல் அலைகளும் அதிக ஆர்ப்பரிப்புடனும், ஆக்ரோஷமாகவும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாமல் தங்களின் படகுகளை கரைகளிலேயே நிறுத்தியுள்ளனர்.
இது குறித்து தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர் லாரன்ஸ் கூறுகையில், “தருவைகுளம் கிராமத்தில் நேற்றிலிருந்து கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த பச்சை நிறத்தை கையில் எடுத்தால், பிசுபிசுவென உள்ளது. இது ஒரு ரசாயனம் மாதிரி இருக்கிறது. மேலும் வேப்பலோடை, பட்டினமருதூர் கிராமத்திலும் மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த மீன்கள் எதனால் சாகிறது, எதனால் மாறுதல் உண்டாகிறது என்று தெரியவில்லை. இதற்கு முன் இவ்வாறு இருந்ததில்லை, இதுவே முதல் முறை" என தெரிவித்தார்.
மேலும், இது குறித்து மீன்வள ஆய்வாளர்கள் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யக் கூடிய செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் கடல் நீர் இவ்வாறு பச்சை நிறத்தில் மாறுகிறது. இதற்கு 'நாக்டிலுகா சைலன்டிலன்ஸ்' என்று பெயர். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நவம்பர் மாதத்தில் இந்த பாசி பச்சை நிறத்தில் மாறி உள்ளது.
அதில், தற்போது பச்சை நிறப்பாசிகள் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன. மழைக் காலங்களில் மழைநீர், கடலில் கலக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் சத்துக்களை உட்கொண்டு, இந்த வகை பாசிகள் வளரக் கூடியது. இந்த வகை கடல் பாசியில் இருந்து அம்மோனியா என்கிற நச்சுத்தன்மை வெளி வருவதுடன், இந்த பாசிகள் வளரக் கூடிய பகுதிகளில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால், சில இடங்களில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகிறது" என தெரிவித்தார்.
இதற்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள கடல் நீர் இதுவரை 4வது முறையாக நீர் மாறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோல வருடந்தோறும் நிகழ்வதால் மீனவர்களும், அப்பகுதி மக்களும் அச்சப்படத் தேவையில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரோட்டில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. நள்ளிரவில் சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்!