தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து ஆங்காங்கே தீவு போல் காட்சியளிக்கிறது.
தூத்துக்குடியில் பெய்த கனமழையால், அப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி உடைந்ததால், வெள்ள நீரானது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கனமழையால் கிராமங்களின் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு தனித்தீவாகப் பல கிராமங்கள் உள்ளன.
இந்த நிலையில், இந்த வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (டிச.21) தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவித்துள்ளார்.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நாளை (டிச.22)விடுமுறை அளித்துள்ளார். மேலும், 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பைக்கில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்ட கனிமொழி..!