தூத்துக்குடி சிலுவைப்பட்டி சமீர் வியாஷ் நகரை சார்ந்த சண்முக கனி என்பவரது மனைவி சுசிலா (85). இவருக்கு 3 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தனது வீட்டை அபகரித்த மகன்களிடமிருந்து, வீட்டை மீட்டுதரக் கோரியும், தனக்கு உணவு வழங்க வேண்டி ஏற்பாடு செய்து தரக்கோரியும் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், கடந்த 17 வருடங்களாக மூத்த மகன்கள் இருவரும் ஒரு உதவியும் செய்யாத நிலையில், தற்போது மூன்றாவது மகனுடன் இணைந்து அவரது மளிகை கடையை கவனித்து வந்தேன். வயது முதிர்வின் காரணமாக என்னால், மளிகைக் கடையை கவனிக்க முடியவில்லை.
இதற்கிடையில் என்னிடமிருந்த பணம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை வைத்து எனது 3ஆவது மகன் சுரேஷ் பெயரில் வீடு வாங்கினேன். தொடர்ந்து சில வருடங்கள் சுரேசுடன் வசித்து வந்த நிலையில் தற்போது தன்னை, தனது மகன்கள் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.
இதனால், தங்க வீடு, உணவுமின்றி பரிதவித்து வருகிறேன். எஞ்சியுள்ள மீதி காலத்தை கடக்க தனது வீட்டை அபகரித்த மகன்களிடமிருந்து வீட்டை மீட்டு தரவும், தனக்கு உணவு வழங்க வேண்டி ஏற்பாடு செய்து தரவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நீலகிரி வனக்கோட்டத்தில் முதன்முறையாக காட்டெருமை குறித்து கணக்கெடுப்பு