தூத்துக்குடி: தருவைக்குளம் ஊராட்சியில் ஆபத்தான அங்கன்வாடி மைய கட்டடத்தில் குழந்தைகள் பாதுகாப்பில்லாத சூழலில் பாடம் பயிலும் நிலையில் உள்ளதால், பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்பாமல் உள்ளனர். எனவே, விரைந்து அக்கட்டடத்தை அகற்றவும், அங்கன்வாடிக்கு ஆசிரியர்களை நியமிக்கவும் வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தருவைக்குளம் பகுதியில் 6 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஐம்பது வீடு காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையம் கடந்த 25 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது.
தற்போது பாதுகாப்பு, சுகாதாரம், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் குழந்தைகள் சிரமத்துடன் பயின்று வருகின்றனர். இந்த மையத்தில் சமையல் அறை கட்டடம் கூரை பெயர்ந்து விழுந்து சுற்று சுவர்களில் விரிசல் ஏற்பட்டு பயன்படுத்த முடியாமல் பூட்டியே உள்ளது. மேலும், கட்டடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க அச்சப்படுகின்றனர்.
மேலும், சூசை ரோஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் காலி இடத்தை சிலர் கழிப்பிடமாகவும், குப்பை கிடங்குகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சுகாதார கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மையத்திற்குள் குழந்தைகளை கடிக்கிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு வகையான மர்ம காய்ச்சல் உள்ளிட்ட பல தொற்று நோய்கள் உருவாகி அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே, இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அங்கவாடி மையத்தின் கட்டடத்தை உரிய முறையில் பாதுகாப்பாக இடித்து அங்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனவும், அப்பகுதியை சுகாதாரமாக வைத்து கொள்ள அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த லாரன்ஸ் கூறுகையில், தருவைகுளம் ஊராட்சி பகுதியில் குழந்தைகள் கல்வி கற்க 6 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 50 வீடுகள் கொண்ட காலனியில் உள்ள ஒரு அங்கன்வாடியில் கட்டட சுவர் பாழடைந்து, சிதலமடைந்த நிலையில் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அதோடு, அந்த சமையலறையின் மேல் சுவர் இடிந்து விழுந்து அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், ஆகவே இதனைப் பூட்டி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பக்கத்து அறையில் அதாவது, குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கக்கூடிய அறைக்குள்ளேயே புகை மண்டலமாக சமையல் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வருவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, பிள்ளைகள் வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று விடுகின்றனர். குறிப்பாக, இந்த மையத்தில் ஆசிரியர்களும் இல்லை என்றும்; சமையல் செய்வதற்கு மட்டுமே ஆட்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே, இடியும் அபாயத்தில் இருக்கும் மையத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
எனவே, சிதிலமடைந்த இந்த அங்கன்வாடி மையத்தின் சமையலறையை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித் தரவும், அங்கன்வாடி மையத்திற்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கவும் வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரி மீது ஆக்ஷன் எடுங்க; முதலமைச்சரிடம் அறப்போர் இயக்கம் கோரிக்கை