தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் நியாயவிலைக் கடை இயங்கிவருகிறது. இதில் விற்பனையாளராக சுந்தரராஜ் என்பவர் பணிபுரிந்துவருகிறார்.
இவர் குடும்ப அட்டைதாரர் அல்லாத நபருக்கு 100 கிலோ அரிசியை விற்றதையறிந்த அப்பகுதி மக்கள் அரிசியை ஏற்றிச்சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினரும், வட்ட வழங்கல் துறை அலுவலர்களும் நியாயவிலைக் கடையில் விசாரணை மேற்கொண்டதில் 100 கிலோ அரிசி எந்தவித ஆதாரமின்றி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 100 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் நியாயவிலைக் கடை விற்பனையாளர் சுந்தரராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் ஆவனசெய்தனர்.
இப்பகுதி மக்களின் துணிச்சலான செயலைக் காவல் துறையினரும், வட்ட வழங்கல் துறை அலுவலர்களும் பாராட்டினர். இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், தங்களுக்கு இந்த நியாயவிலைக் கடையின் மூலமாக உரிய பொருள்கள் வழங்கப்படுவதில்லை எனவும் நியாயவிலைக் கடை விற்பனையாளர் சுந்தரராஜ் அரிசியை விற்பனை செய்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய ஜமாத்!