தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பெய்த கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர், பாரதி நகர், கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு சுகதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமும் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவதாகக் கூறி பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மேற்கூறிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வலியுறுத்தி பாளையங்கோட்டை பிராதான சாலையில் அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், தூத்துக்குடி - திருநெல்வெலி சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய பாகம் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை அம்மக்கள் கைவிட்டனர்.
இதையும் படிங்க: கடன் தொல்லை: குடும்பத்துடன் விஷமருந்திய விசைத்தறி உரிமையாளர்!