தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அந்தோணியார்புரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பிரதானமாக பனை சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இங்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், சமூக நலக்கூடம் முதலானவை இருக்கின்றன.
இதையடுத்து அந்தோணியார் புரத்தை சேர்ந்த வாக்காளர்களுக்கு 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஊரான திரவியபுரத்தில் வாக்குச்சாவடி மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், முதியோர்கள் திரவியபுரத்துக்கு சென்று வாக்களிப்பதில் சிரமம் உள்ளது.
ஆயிரத்து 50 வாக்காளர்களுக்கு மேல் உள்ளதால் அந்தோணியார் புரத்தில் செயல்படும் பள்ளிக்கூடத்தில் வாக்குப்பதிவு மையம் ஏற்படுத்தி தரவேண்டும். தங்களது ஊரை வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
ஆனால் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையிலும் அலுவலர்கள் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஊர் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தினர்.
அதன் முடிவில், தேர்தலையொட்டி அந்தோணியார் புரம் ஊர் பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தராத அலுவர்களை கண்டித்து வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதென்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுதொடர்பாக ஊர்மக்கள் சார்பில் அந்த ஊரில் முக்கிய இரண்டு இடங்களில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் அதிமுகவுக்கு நெருக்கடி - சமுதாயம் சார்ந்த சுவரொட்டிகளால் பரபரப்பு