தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தின்கீழ் 42 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவடைந்த பணிகளை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப். 25) தொடங்கிவைத்தார். தொடர்ந்து அங்கு 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துறைமுக சபைத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, "இந்தியாவின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு பெரும் பங்கு வகிக்கிறது. இன்று தமிழ்நாட்டில் ரூ.3,000 கோடி செலவில் இரண்டு பெரிய மின் உற்பத்தி திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர ரூ.7,800 கோடி மதிப்பில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டிற்கு 65 விழுக்காடு மின்சாரம் கிடைக்கும்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் வளர்ச்சிக்காக 42 கோடி ரூபாய் மதிப்பில் கோரம்பள்ளம் பாலம் எட்டு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இது துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை வலுப்படுத்தும்.
20 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் மின்தேவையைப் பெற முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் முதல் கிரீன் போர்ட் என்ற அந்தஸ்தை தூத்துக்குடி துறைமுகம் பெறுகிறது.
துறைமுகங்களை நவீனமயமாக்குதல், விரிவாக்கம் செய்தல், கடற்கரைப் பகுதி மக்கள் மேம்பாடு, புதிய துறைமுகத்தை உருவாக்குதல் போன்றவை மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தின் மூலம் அமைக்கப்படுகிறது.
ஏற்கனவே துறைமுகத்தில் 500 கிலோவாட் சூரிய மின்சக்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் 140 கிலோ வாட் சூரிய மின்சக்தித் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றுவேன்: பிரதமர் மோடி