தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் சிறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில், பல்வேறு குழுக்களாக விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2 உதவி ஆய்வாளர்கள், ஒரு காவலர் என நான்கு பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். தந்தை-மகன் இறந்த வழக்கில் முக்கிய சாட்சியாக பெண் தலைமைக் காவலர் ரேவதி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவரிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர், காவல் சூப்பிரண்டு விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் மகாராஜன் தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. இந்நிலையில், காவலர் மகாராஜனிடம் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஐஜி சங்கர் செய்தியாளர்களை கூறியதாவது, “தலைமைக் காவலர் ரேவதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நள்ளிரவு வரை நீடிக்கலாம். வழக்கு தொடர்பாக மகாராஜன் ஆஜராகவில்லை. அவர் ஆஜராக வந்த தகவல் பொய்யானது. கைது செய்யப்பட்டவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளுக்கு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் அறுசுவை உணவு - ஆர்.பி. உதயகுமார்