தூத்துக்குடி: தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி.சவேரியார்புரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அஜித்குமார் (28). இவர் கடந்த ஜூன் 6ஆம் தேதி அதிகாலை, அதே பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அஜித்குமாரை அரிவாளால் தாக்கியது மட்டுமல்லாமல், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 8 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் பறித்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி 4வது ரயில்வே கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த ஏரல் சேதுக்குவாய்த்தானைச் சேர்ந்த காஜா முகைதீன் மகன் ஹிதயத்துல்லா (51) என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி, செல்போன் உள்பட 4 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்றுள்ளனர்.
மேலும், நேற்று அதிகாலை குறுக்குச்சாலையில் நின்று கொண்டிருந்த ஓட்டப்பிடாரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த வீரப்பன் மகன் கிருஷ்ணசாமி (72) என்பவரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள், அவரிடம் இருந்து சுமார் இரண்டரை சவரன் எடையுள்ள 2 தங்க மோதிரங்களை பறித்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஓட்டப்பிடாரம் கோட்டை தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் மாடசாமி (60) என்பவரையும் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து சுமார் ஏழரை சவரன் எடையுள்ள மோதிரம், பிரேஸ்லெட் மற்றும் செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத், மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் ஆகியோரின் தலைமையில்,
உதவி ஆய்வாளர்கள் ராஜபிரபு, முனியசாமி, முத்துராஜா, சதீஷ் நாராயணன், தலைமைக் காவலர் மாணிக்கராஜ், மு.நி.கா. சாமுவேல், மகாலிங்கம், செந்தில்குமார், திருமணி ராஜன், காவலர்கள் முத்துப்பாண்டி, சக்தி மாரிமுத்து, சண்முகையா, டேவிட்ராஜன், சுடலை மணி, கதிரவன், விசு, சந்தனசேகர் மற்றும் மகேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில், தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது யார் என்பதும், அவர்களது பின்னணியும் தெரிய வந்துள்ளது. இதன்படி, தூத்துக்குடி கோவில் பிள்ளைவிளையைச் சேர்ந்த செல்வபாரதி மகன் மகாராஜா (19), தூத்துக்குடி யுனிகோ நகரைச் சேர்ந்த ஜெபமாலை மகன் ஜவகர் (44), தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த அந்தோணி மகன் மோகித் (19),
புளியம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஏசுதாசன் மகன் ரோஷன் (20), தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செல்வகுமார் (19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுவர் ஒருவர் என 6 பேரும் சேர்ந்து திட்டமிட்டு, பாதிப்படைந்த நபர்களிடம் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, இவர்கள் பணம் மற்றும் தங்க நகைககளுடன் புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மேன்சனில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். அதன் பின்னர், அவர்கள் புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குவாரியில் குளிக்கச் சென்றபோது, சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் மோகித் மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேரும் அங்குள்ள பாறையில் வழுக்கி விழுந்ததில் இருவருக்கும் கை முறிவு ஏற்பட்டு, திருநெல்வேலி சென்று மாவுகட்டு போட்டுவிட்டு மீண்டும் அறையில் சென்று தங்கி உள்ளனர்.
இதனை அறிந்த தனிப்படை காவல் துறையினர், புளியம்பட்டி பகுதியிலுள்ள மேன்சனில் பதுங்கி இருந்த மகாராஜா, ஜவஹர், மோகித், செல்வகுமார் மற்றும் ரோஷன் ஆகிய 5 பேரை கைது செய்து, ஒரு சிறுவரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அவர்கள் கொள்ளையடித்த 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 சவரன் தங்க நகைகள், 2 செல்போன்கள் ஆகியவற்றையும், கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல், கைது செய்யப்பட்ட செல்வகுமார் மீது ஏற்கனவே தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மோகித் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு உட்பட 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மிகவும் துரிதமாக செயல்பட்டு தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல் துறையினர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Operation Children missing: 48 மணி நேரத்தில் 121 குழந்தைகள் மீட்பு